நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுமா?: இபிஎஸ் டு ஓபிஎஸ்; ஓபிஎஸ் டு இபிஎஸ் ரூட் பஸ்-ஆக மாறிய தமிழக அமைச்சர்கள்..!!!

சென்னை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில், எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே வெளிப்படையாகவே மோதல் நடந்து வருகிறது. 7ம் தேதி (நாளை) அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் எடப்பாடி - ஓபிஎஸ் இருவரும் இன்னும் நேரடியாக சந்திப்பதை தவிர்த்து வருகிறார்கள். அதிமுக பொதுக்குழுவில் அறிவித்தபடி, வழிகாட்டும் குழுவை முதலில் அமைக்க வேண்டும். அந்தக்குழு பரிந்துரையின் பேரில்தான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தார்.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட சிலர் ஈடுபட்டு வந்தனர். இந்த பிரச்னை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அவ்வப்போது சந்தித்து பேசினர். ஆனாலும் பொதுக்குழுவில் நிறைவேற்றியபடி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் உறுதியாக இருக்கிறார்.

இதற்கிடையே, கடந்த 28ம் தேதி செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை நாளை திட்டமிட்டப்படி அறிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்று காலை முதல் முதல்வர், துணை முதல்வர் என மாறி மாறி அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி,ஜெயக்குமார், உதயகுமார் மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  2.30 மணி நேரம் நடைபெற்ற ஓபிஎஸ் உடனான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த நிலையில், அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். முதல்வர், துணை முதல்வர் என மாறி மாறி அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருவது திட்டமிட்டபடி நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: