தமிழக காவல்துறையில் கடந்த 9 மாதங்களில் 238 போலீசார் உயிரிழப்பு: பணிச்சுமை, கொரோனா பாதிப்புகளால் பரிதாபம்

மதுரை: தமிழக காவல்துறையில் பணிச்சுமை, மன உளைச்சல், கொரோனா பாதிப்பு என பல்வேறு காரணங்களால் கடந்த 9 மாதங்களில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 1,523 காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் பல வருடங்களாக நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ளன. தற்போது 10 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணியாளர்கள் பற்றாக்குறையால் பணிச்சுமை, மன உளைச்சல், கொரோனா பாதிப்பு என பல போலீசார் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலர் தற்கொலை, பணியை விட்டு மாயம் ஆகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. நடப்பாண்டில் மன உளைச்சல், கொரோனா பாதிப்பு உள்ளிட்டவைகளில் 238 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஆவண காப்பக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் நடப்பாண்டில் கடந்த 9 மாதங்களில் 238 போலீசார் இறந்துள்ளனர். இதில் 35 பேர் கொரோனா பாதிப்பிலும், 37 பேர் தற்கொலை சம்பவங்களிலும் இறந்துள்ளனர். 46 பேர் விபத்துகளிலும், 74 பேர் உடல்நலக்குறைவிலும், 6 பேர் புற்றுநோய் பாதிப்பிலும், 2 பேர் பணியில் இருந்தபோது தாக்கப்பட்டும், ஒருவர் கொலை செய்யப்பட்டும், 37 பேர் மாரடைப்பிலும் உயிரிழந்துள்ளனர்’’ என்றார். போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறையை போக்க புதிய நபர்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பலர் பயிற்சியில் உள்ளனர். இவர்கள் பயிற்சி முடித்தவுடன், பொது பணிகளுக்கு எடுக்கப்படுவர். அப்படி வரும் சமயத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றம் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படும். கூடுதல் ஆட்கள் நியமனம் பெறுவதால்,  போலீசாருக்கு 8 மணிநேரம் வேலை, வார விடுமுறை போன்றவை முறையாக நடைமுறைப்படுத்தப்படும். இதனால் போலீசாருக்கு மன உளைச்சல் குறைந்து, உயிரிழப்புகளும் குறைய வாய்ப்புகள் உள்ளது’’ என்றார்.

Related Stories: