அதிமுகவில் பாஜ தலையீடு எதிரொலி மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகளின் தொகுதிகள் பறிபோகும் ஆபத்து: 60 தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுக்கும் டெல்லி தலைமையின் திட்டத்தால் புதிய பரபரப்பு

சென்னை: அதிமுக உள் விவகாரங்களில் தலையிடும் பாஜ, அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் வென்ற தொகுதிகள் உள்பட 60 தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. இது அதிமுக மூத்த தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் உள்கட்சி மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் டெல்லி தலைமைதான் கடைசியில் பஞ்சாயத்து செய்துள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடுவதற்காக 60 தொகுதிகளின் பட்டியலை தமிழக பாஜ தயாரித்துள்ளது. தேசிய தலைவர் நட்டாவிடம் இப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. 60 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டுப் பெறுவதற்கான வேலைகளை டெல்லி மேலிடம் தொடங்கியுள்ளது.

பீகார் தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு 122 தொகுதிகளும், பாஜவுக்கு 121 தொகுதிகளும் வழங்கப்பட்டன. இந்த பார்முலா படி இல்லாவிட்டாலும் தமிழகத்தில் கணிசமான தொகுதிகளை கேட்டுப் பெற பாஜ திட்டமிட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டணி பேச்சுவார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே செய்தனர். தமிழக பாஜ பொறுப்பாளர் பியூஸ் கோயல் தான் எடப்பாடியிடம் பேசினார். அப்போது எடப்பாடி கறாராக இருந்தார். ஜெயலலிதாவைப் போல அதிமுகதான் பெரிய கட்சி என்ற முறையில் விட்டுக் கொடுக்காமல் பேசினார். இது பாஜ தலைமைக்கு அதிருப்தியை கொடுத்தது. இதனால்தான் அதிமுகவில் எடப்பாடியை தனியாக தலைமை ஏற்க வைத்தால், பாஜ வளர முடியாது என்று மேலிடம் கருதுகிறது. இதனால் தனக்கு வேண்டப்பட்ட ஓபிஎஸ் முக்கிய பதவியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அப்போதுதான் 60 தொகுதிகளை பெற முடியும் என்று கருதுகிறது.

இந்த 60 தொகுதிகளில் பெரும்பாலும் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், கோவை, ஈரோடு, சேலம், வேலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பாக அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளை அவர்கள் குறி வைத்துள்ளனர். இந்த தொகுதிகளை கண்டிப்பாக தரவேண்டும் என்று கேட்டால், கொடுக்க வேண்டிய நிலையில்தான் அதிமுக தலைவர்கள் உள்ளனர். இந்த தகவல் தற்போது மூத்த தலைவர்களுக்கும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர். தொகுதி பங்கீட்டில் அதிக சீட்டை அதிமுக இழப்பதோடு, முக்கிய தொகுதிகளும் பறிபோகும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

இதனால் மீண்டும் அதிமுகவில் பெரிய அளவில் மோதல் உருவாகலாம். குறிப்பாக தொகுதிக்குத் தொகுதி மோதல் வெடிக்கும் சூழ்நிலை உருவாகும். அப்போது மூத்த தலைவர்களை எடப்பாடியும், ஓபிஎஸ்சும் சமரசப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும். அதை மூத்த தலைவர்கள் ஏற்பார்களா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதனால் பாஜவுக்கு கீழ்படியும் அதிமுக தலைவர்களால், ஆளும் கட்சியும், மூத்த தலைவர்களும் என்ன பாடுபடப்போகிறார்களோ என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தொகுதி பங்கீட்டில் அதிக சீட்டை அதிமுக இழப்பதோடு, முக்கிய தொகுதிகளும் பறிபோகும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இதனால் மீண்டும் அதிமுகவில் பெரிய அளவில் மோதல் உருவாகலாம்.

Related Stories: