வடமாநில ஆர்டர் குறைவால், உற்பத்தியும் குறைப்பு; பாதியாக குறைகிறது பட்டாசு விற்பனை: கொரோனா ஊரடங்கால் முடங்கியது ‘குட்டி ஜப்பான்’

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி `குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு 1,100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசு இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வடமாநில வியாபாரிகள் தீபாவளி பண்டிகை முடிந்து ஒரு சில மாதங்களில் அடுத்த ஆண்டுக்கான ஆர்டர்கள் வழங்கி முன்பணம் கொடுப்பது வழக்கம். இதன்பேரில், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் உற்பத்தி பணியில் ஈடுபடுவார்கள். இந்த ஆண்டும் வழக்கம் போல் வெளிமாநில வியாபாரிகள் ஆரம்பத்தில் அதிக ஆர்டர்களை வழங்கி முன் பணம் கொடுத்தனர்.

இதனை நம்பி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உற்பத்தி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தியாவில் கடந்த மார்ச் முதல் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பட்டாசு ஆலைகள் முழுவதும் மூடப்பட்டன. மூன்று மாதங்கள் ஆலைகள் தொடர்ந்து மூடப்பட்டதால் ரூ.500 கோடி அளவிலான பட்டாசு உற்பத்தி பணிகள் முடக்கமடைந்தன. தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டனர். இதன் பின் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு மீண்டும் செயல்படத் துவங்கின. ஆனால், வடமாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக திருமணம், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் பட்டாசு வியாபாரம் நடைபெறவில்லை.

வடமாநில வியாபாரிகளிடம் அதிகளவில் பட்டாசுகள் தேக்கமடைந்ததால் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு ஆர்டர்களை 60 சதவீதம் வரையில் குறைத்து விட்டனர். இதனால் சிவகாசி பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக ஆலை உரிமையாளர்கள் தயாரிப்புப் பணியை பாதியாக குறைத்து விட்டனர். ஒரு சில ஆலைகளில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பணிகள் நடைபெற்றன. வடமாநில வியாபாரிகள் கைவிட்ட நிலையில் தமிழ்நாட்டு வியாபாரம் கைகொடுக்கும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். அதுவும் மந்தமாக உள்ளதால் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

இதேநிலை இன்னும் 20 நாட்களுக்கு மேல் நீடித்தால் பட்டாசு ஆலைகளை தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்களுக்கு முன்பே மூட உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் பட்டாசு தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ``பட்டாசுகளுக்கு கடந்த ஆண்டு கடும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் கடந்த ஆண்டு சிவகாசியில் தயாரான அனைத்து பட்டாசுகளும் விற்று தீர்ந்தன. இதனால் கடந்த ஜனவரி மாதம் முதலே இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்களை வடமாநில வியாபாரிகள் கொடுத்தனர். இதன் காரணமாக பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் ஆரம்பம் முதலே தீவிரமாக நடைபெற்று வந்தது.

கொரோனாவால் பட்டாசு வியாபாரிகள் ஆர்டர்களை குறைத்ததால் தொழில் பாதிப்படைந்துள்ளது. வருடத்திற்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு விற்பனை நடைபெறும் பட்டாசு தொழிலில், இந்த ஆண்டு 50 சதவீத அளவுக்கு விற்பனை பாதிப்படைந்துள்ளது. மந்தநிலை தீபாவளி பண்டிகை வரை நீடித்தால் அடுத்த ஆண்டும் பட்டாசு தொழில் பெருமளவில் பாதிப்பை சந்திக்கும்’’ என்றார்.

Related Stories: