ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்காக சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு: நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர்; 40 நாளில் தேர்வு முடிவு

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஎப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. இந்தியா முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் 50,000 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் ஆங்கிலம்-இந்தியில் விதிமுறைகள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.)ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 796 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 12ம் தேதி அறிவித்தது. மார்ச் 3ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இத்தேர்வுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், சுமார் 6 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் 31ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவலை தொடர்ந்து ஜூன் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் கொரோனா பரவல் காரணமாக தேர்வு அக்டோபர் 4ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் தேர்வை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று தேர்வு எழுதுபவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். யுபிஎஸ்சி அளித்த விளக்கத்தை ஏற்று இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து திட்டமிட்டப்படி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஎப்எஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது. இந்தியா முழுவதும் 72 நகரங்களில் 2569 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் 300 இடங்களில் இந்த தேர்வு நடந்தது. இத்தேர்வை சுமார் 50,000 பேர் எழுதினர். சென்னையில் சென்னை எழும்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி, அண்ணாசாலை அரசினர் மதரசா-ஐ-ஆஜம் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர் ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் என 62 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இந்த மையங்களில் 22 ஆயிரம் பேர் தேர்வை எழுதினர்.

காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடந்தது. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இருந்தது. தேர்வு எழுதுவோர் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், பேஜர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதன பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டிருந்தது. தேர்வுக்கூடத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தேர்வர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னரே தேர்வு கூடங்களுக்குள் செல்ல தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தண்ணீர் பாட்டில் மற்றும் சானிடைசர்ஸ் தேர்வர்கள் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேர்வு நடந்த மையங்கள் அனைத்திலும் துணை ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்பு பணி நடைபெற்றது. அது மட்டுமல்லாமல் தேர்வு நடந்த மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது:

சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் 40 நாட்களில் வெளியிடப்படும். அதாவது அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு ஜனவரி 8ம் தேதி தொடங்குகிறது. மெயின் தேர்வு 5 நாட்கள் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதாவது அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 12 மடங்கு அதிகமானவர்கள் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். சிவில் சர்வீஸ் தேர்வை 32 வயது வரை மட்டுமே எழுத முடியும். இந்தாண்டு கொரோனா காரணமாக மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தான் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். எனவே, இந்தாண்டு தேர்வு எழுதியவர்களுக்கு வயது வரம்பில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்து மீண்டும் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இவ்வாறு வைஷ்ணவி கூறினார்.

    

* இந்தி ஆங்கிலத்தில் விதிமுறைகள்

சென்னையில் தேர்வு நடைபெற்ற அனைத்து தேர்வு மையங்கள் முன்பாக மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான விரிவான விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் ஓட்டப்பட்டிருந்தது. அதில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெற்றிருந்தது. தமிழில் விதிமுறைகள் எதுவும் இடம் பெறவில்லை. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

* தேர்வு எளிதா? கடினமா? மாணவர்கள் கருத்து

தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறியதாவது:

சிவில் சர்வீஸ் தேர்வில் காலையில் பொது அறிவு தேர்வும், மதியம் திறனறிவு தேர்வும் நடந்தது. வழக்கமாக பொது அறிவு தேர்வில் பாடம் சம்பந்தமாக 50 சதவீதமும், நடப்பு நிகழ்வுகள் சம்பந்தமாக 50 சதவீதம் வினாக்களும் கேட்கப்படும். ஆனால், நேற்று நடைபெற்ற தேர்வில் அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழலில் இருந்து 80 சதவீதமான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. பிற்பகலில் நடைபெற்ற திறனறிவு தேர்வில் கேள்வி கேட்கப்பட்டு அதற்கு விளக்கங்கள் அதிக அளவில் கேட்கப்படும். ஆனால், நேற்றைய தேர்வில் கணிதத்தில் இருந்து அதிக அளவிலான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இதனால், கணக்கு எழுதி பார்த்து விடை எழுத ரொம்ப நேரம் ஆனது. மொத்தத்தில் தேர்வு ரொம்ப எளிதாக இருந்ததாகவும் சொல்ல முடியவில்லை, ரொம்ப கடினமாக இருந்ததாகவும் சொல்ல முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: