ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராசில் 19 வயது தாழ்த்தப்பட்ட இளம்பெண், 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டார். இவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த மரணத்துக்கு நீதி கேட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பிரியங்காவுடன் 3 மூத்த நிர்வாகிகள் ஹத்ராஸ் சென்றனர். இளம்பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ராகுல், பிரியங்கா, அவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர், பிரியங்கா அளித்த பேட்டியில், ‘இளம்பெண்ணின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை, போராட்டம் தொடரும்,’ என்று அறிவித்தார். இந்நிலையில் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். ஹாத்ராஸ் சம்பவத்திற்கு நீதி கேட்டு மாநிலங்கள் மற்றும் மாவட்ட தலைமையகங்களில் நாளை சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: