பெரியகுளம் பண்ணை வீட்டில் 2ம் நாளாக இன்றும் ஓபிஎஸ் ஆலோசனை: பன்னீர்செல்வத்துடன் 58 கிராம விவசாயிகள் சந்திப்பு

பெரியகுளம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் 2ம் நாளாக இன்றும், தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். வரும் 7ம் தேதி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் நிலையில், தொடர்ந்து ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை நீடிப்பதால், அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் தொடர்கிறது. சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கிய அவர், நேற்று காலை 11 மணி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நேற்று இரவு அமைச்சர் உதயகுமார் மற்றும் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பெரியகுளம் வந்து, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ‘‘உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் சிலை நிறுவிட, துணை முதல்வர் ஓபிஎஸ்,

அவரது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத் வாக்குறுதி அளித்திருந்தார். நாளை (இன்று) காலை உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் சிலை அமைய உள்ள இடத்தை துணை முதல்வர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்ய உள்ளார். இதற்கான ஆலோசனைக்காகவே, 4 எம்எல்ஏக்களுடன் வந்து ஓபிஎஸ்சை சந்தித்தேன்’’ என்றார். நேற்றிரவும் தனது பண்ணை வீட்டிலேயே ஓபிஎஸ் தங்கினார். இன்று காலை 8 மணியளவில் அகில பாரத இந்து மகாசபை மாநிலத் தலைவர் சென்னையை சேர்ந்த சுப்பையா பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சிலர் வந்தனர். அவர்கள் ஓபிஎஸ்சை சந்தித்து, பேசினர்.

தொடர்ந்து ராமநாதபுரம் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ரத்தினம், ஜமாத் துணைத் தலைவர் ரமீஸ் உட்பட ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆதரவாளர்களுடன் இன்று காலை ஓபிஎஸ்சை சந்தித்தனர். அவர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் காலை 9 மணியளவில் அவர் காரில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மூக்கையா தேவர் சிலை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.  அங்கும் விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவரை சந்தித்தனர்.

Related Stories: