வேலூரில் மர்மகும்பல் வெட்டியதில் உயிர் பிழைத்தவர்: உயிருக்கு ஆபத்து இருப்பதாக சிறை காவலர் போலீசில் புகார்: ரவுடிகள் குறித்து தீவிர விசாரணை

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் பணியாற்றும் க்யூஆர் பிரிவு போலீஸ்காரர் குறித்து ரவுடிகள் விசாரித்து சென்றுள்ளதால், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவர் போலீசில் புகார் செய்துள்ளார். வேலூர் மத்திய சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் க்யூஆர் குழுவில்  முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் பிரேம்குமார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணி முடித்து சிறை அருகே நடந்து சென்றபோது மர்மகும்பல் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறை காவலர்களுக்கான குடியிருப்பில் வசித்துவரும் பிரேம்குமார் குறித்து மர்ம ஆசாமிகள் விசாரித்து சென்றுள்ளனராம். குறிப்பாக பிரேம்குமார் பணிக்கு செல்லும் நேரம், திரும்பிவரும் நேரம் ஆகியவை குறித்து கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரவுடிகள் தோற்றத்தில் இருந்த அவர்களிடம், குடியிருப்பில் உள்ளவர்கள், ‘நீங்கள் யார்? எதற்காக இவற்றை கேட்கிறீர்கள்?’ என கேட்டதற்கு, ‘நாங்கள் பிரேம்குமாரின் உறவினர்கள்’ எனக்கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து பிரேம்குமாரிடம், குடியிருப்பில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தனது உயிருக்கு மீண்டும் ஆபத்து உள்ளதாகவும், தன்னை பற்றி விசாரித்து சென்ற மர்ம ஆசாமிகள் யார்? என கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: