சிலை, நிலம், கடை, வீடு வாடகை தொடர்பாக கோயில் வழக்குகள் எத்தனை நிலுவையில் உள்ளது?: கமிஷனர் அறிக்கை அனுப்ப உத்தரவு

சென்னை: சிலை, நிலம், கடை, வீடு வாடகை தொடர்பாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை என்பது தொடர்பாக அறிக்கை அனுப்ப கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44,120 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடு,கடைகள் உள்ளன. இதில், பல்லாயிரகணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளதால், அந்த நிலங்களை மீட்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளது. அதே போன்று கோயில் வீடு, கடை வாடகை நிலுவை தொகை தொடர்பாகவும் இணை ஆணையர் நீதிமன்றம், ஆணையர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளது. இந்த நிலையில், நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான விவரங்களை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், வரும் அக்டோபர் 10ம் தேதி காலை 10 மணியளவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையர் பிரபாகர் தலைமையிலான சீராய்வு கூட்டம் சார்நிலை அலுவலர்களின் பணி முன்னேற்றத்திற்கான சீராய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, கடந்த 30ம் தேதி வரை உள்ள காலத்திற்குண்டான நீதிமன்ற வழக்குகள் குறித்து மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் இணை/துணை/உதவி ஆணையர்/செயல் அலுவலர் நிலை கோயில்கள் வாரியான புள்ளி விவரங்களை அனைத்து கோயில் நிர்வாகங்களிடம் இருந்து பெற்று தொகுத்து அனுப்பி வைக்க வேண்டும்.

இதில், அரசை தரப்பினராக சேர்க்க வழக்குகளில் எதிருரை தாக்கல் செய்தல், காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை தொகுத்து உடனடியாக சட்டப்பிரிவு மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வருவாய் நீதிமன்ற வழக்குகள் மற்றும் ஆணையர் நீதிமன்றம், இணை ஆணையர் நீதிமன்ற வழக்குகள் குறித்த விவரத்தினை ஆணையர் அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட பிரிவுக்கு சுருக்கமாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: