கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்து கணக்கை தாக்கல் செய்யாத பொறியாளர்கள்: ஐடியிடம் குவிந்தது புகார்: சொத்து குவித்த அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொத்து கணக்கு விவரங்களை  பொறியாளர்கள் பலர் தாக்கல் செய்யவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை பயன்படுத்தி சொத்து குவிப்பில் ஈடுபட்டவர்கள் மீது வருமானவரித்துறைக்கு புகார் சென்று இருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் உதவி பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், கோட்ட பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், நெடுஞ்சாலைத்துறையில் பணியில் சேர்ந்த நாளில் தங்களது பெயரில் சொத்து கணக்கு விவரங்களை தாக்கல் செய்கின்றனர். இவர்கள், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும், தங்களது விவரங்களை தாக்கல் செய்வது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, உதவி பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் என்றால் கோட்ட பொறியாளரிடமும், கோட்ட பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் என்றால் தலைமை பொறியாளரிடமும், தலைமை பொறியாளர், முதன்மை தலைமை பொறியாளர் என்றால் அரசு செயலாளரிடமும் தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மறந்தால் கூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டு பெற வேண்டும். ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் பொறியாளர்களில் பெரும்பாலாேனார் தங்களது சொத்து கணக்கு விவரங்களை 10 ஆண்டுகளுக்கு மேலாக தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, பொறியாளர்கள் பலர் 15 முதல் 20 ஆண்டுகள் வரை கணக்குகள் தாக்கல் செய்வதில்லை. இதனால், அந்த பொறியாளர்களின் சொத்து விவரங்கள் தெரியாமல் போய் விடுகிறது. உயர் அதிகாரிகளும் சொத்து விவரங்கள் கேட்டு அவர்களுக்கு நெருக்கடி தருவதில்லை. இதை பயன்படுத்தி கொண்டு தான் பொறியாளர்கள் பலர் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக பொறியாளர்கள் பலர் சொத்துக்களை வாங்கி குவித்து வருவதாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றுள்ளது. அந்த புகாரின் பேரில் கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பிட்ட சில பொறியாளர்களின் சொத்து கணக்கு விவரங்களை கேட்டு வருமான வரித்துறை நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், நெடுஞ்சாலைத்துறையிடம் இந்த விவரங்கள் இல்லாத சூழலில் பதில் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பொறியாளர்கள் பலர் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வருகின்றனர். இந்த விவகாரம் நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: