காவல் மரணங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்: 2019ல் மட்டும் 11 பேர் பலி!!

சென்னை : காவல் மரணங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மற்றும் 11 பேர் தமிழகத்தில் உயிரிழந்து இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2019ம் ஆண்டு நடைபெற்ற குற்றங்கள் பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் காவல் மரணங்கள் மற்றும் காவல்துறையினருக்கு எதிரான புகார்கள் பிரிவில் நாடு முழுவதும் நடந்த சம்பவங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன.

அதன்படி, 2019ம் ஆண்டு 53 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் மிக அதிமாக தமிழகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக குஜராத், மராட்டியத்தில் தலா 9 பேரும் பஞ்சாப், ராஜஸ்தானில் தலா 6 பேரும் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் 4 பேரும் மத்தியப் பிரதேசத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். 53 காவல் மரணங்கள் தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

29 சம்பவத்தில் நீதிமன்ற விசாரணையும் 20 சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணையும் நடைபெற்று வருகிறது. 3 சம்பவங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. காவல் மரணங்கள் தமிழகத்தில் அதிகம் நடைபெற மனித உரிமை மீறல்களே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமீபத்தில் சாத்தான்குள காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற வியாபாரி ஜெயராஜ் ,பென்னிக்ஸ் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்ததையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Related Stories: