வாட்ஸ்அப் குழு உருவாக்கி குறைந்த விலையில் துணி தருவதாகபல பெண்களிடம் பண மோசடி : ஆசாமி கைது; செல்போன் பறிமுதல்

பெரம்பூர்,: சென்னை ஓட்டேரி, ஏகாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்திரா பிரகாஷ். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியந்தோப்பு சரக துணை கமிஷனரிடம் புகார் மனு அளித்தார். அதில், “வாட்ஸ் அப்” குழு மூலம் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர், துணி விற்பனை செய்கிறேன், துணிகளை போட்டோ எடுத்து அனுப்பி யுள்ளேன். உங்களுக்கு பிடித்தால் குழுவில் சேர்ந்து குறைந்த விலையில் துணிகளை வாங்கலாம் என பதிவிட்டுள்ளார்.

குறைந்த விலையில் நல்ல துணிகள் கிடைப்பதால் அவரை நம்பி நான் உட்பட எங்கள் பகுதியை சேர்ந்த பல பெண்கள் குழுவில் சேர்ந்து சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்கில் பல ஆயிரம் ரூபாய் செலுத்தினோம். அதன்பிறகு அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் என வருகிறது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தரவேண்டும்” என குறிப்பிட்டு இருந்தனர்.

இதையடுத்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன்  மர்ம நபர் பயன்படுத்திய  செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு போன்றவற்றை ஆய்வு செய்து, மேற்கு தாம்பரம், கல்யாண்நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (42) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், இவர் பேஸ்புக் மூலம் நடுத்தர வயது பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களின் தொலைபேசி எண்ணை எடுத்து அதன் பிறகு குறிப்பிட்ட பகுதியில் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி பெண்களிடம் விலை உயர்ந்த துணிகளை காண்பித்து அதை மலிவு விலையில் தருவதாக கூறியுள்ளார்.

வாட்ஸ்அப் குழுவில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்தவுடன் அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு வாட்ஸ் அப் குழுவை கலைத்து விடுவார். இவ்வாறு சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இவரிடமிருந்து 2 செல்போன், 6 சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம்  ஓட்டேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் மூலம் குறைந்த விலையில் பொருள் தருவதாக கூறி வங்கியில் பணம் செலுத்துமாறு கூறினால் அதை பொதுமக்கள் நம்பி ஏமாறவேண்டாம். சந்தேகப்படும்படியான நபர் குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

Related Stories: