கேரள வியாபாரிகள் வராததால் வெறிச்சோடிய கம்பம் வார சந்தை

கம்பம்: கேரளாவில் ஊரடங்கு அமலில் உள்ளதால், கம்பம் வாரச்சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வரவில்லை. இதனால் கம்பம் வாரச்சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. தேனி மாவட்டம், கம்பத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தையில் காய்கறிகள் வாங்க கம்பம் மட்டுமின்றி, கம்பத்தை சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள். கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இந்த சந்தை இயங்க தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, கடந்த செப்டம்பர் முதல் இந்த சந்தை இயங்கி வருகிறது.

ஆனால் சந்தை திறந்து 4 வாரம் முடிந்த நிலையிலும், இந்த வாரச்சந்தை கூட்டமின்றி உள்ளது. கேரளாவில் ஊரடங்கு தளர்வு செய்யாததால், கேரள வியாபாரிகள் கம்பம் வாரச்சந்தைக்கு வர முடியவில்லை. இதனால் கம்பம் வாரச்சந்தை வியாபாரிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது என கூறப்படுகிறது. இது குறித்து கம்பம் வார சந்தை வியாபாரிகள் சிலர் கூறுகையில், ‘‘கம்பம் வார சந்தையைப் பொறுத்தவரை கேரள வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்வார்கள். ஆனால் கேரளாவில் ஊரடங்கு தளர்வு செய்யப்படாததால், கம்பம் சந்தைக்கு வருவதில்லை. இதனால் உள்ளூர் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது’’ என்றனர்.

Related Stories: