பெரியபாளையம், சிறுவாபுரி கோயில்களில் துணை முதல்வர் ஓபிஎஸ் சிறப்பு தரிசனம்

சென்னை: பெரியபாளையம் பவானியம்மன், சிறுவாபுரி முருகன் கோயில்களில் துணை முதல்வர் நேற்று சிறப்பு தரிசனம் செய்தார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில்,  அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அதிகார போட்டி தற்போது நிலவி வருகிறது. அதனால், முதல்வர் எடப்பாடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கடந்த சில நாட்களாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தவிர்த்து வருகிறார். மேலும், அவரது ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள சின்னபேடு சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு நேற்று இரவு 7:10 மணிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார். அங்கிருந்து புறப்பட்டு, பெரியபாளையத்தில் உள்ள பவானியம்மன் கோயிலுக்கு 8:10 மணிக்கு சென்றார். அங்கு, அம்மனை தரிசனம் செய்தார். பின்னர், அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டார். இந்த இரண்டு கோயில்களிலும், அடுத்த முதல்வர் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்டு, முதல்வர் ஆகவேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Related Stories: