பருவ மழை முன்னெச்சரிக்கை பணி மேற்கொள்ள முன்அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு விதி மீறி ஒப்பந்தம் வழங்கிய அதிகாரிகள்

* தூர்வாரும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை

* சென்னை மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள முன் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு விதிமீறி ஒப்பந்தம் வழங்கி இருப்பது பொதுப்பணித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2வது வாரத்துக்கு பிறகு தொடங்கும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் உள்ள அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலை ஆற்று படுகைகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் செல்ல வசதியாக தூர்வாறும் பணிகளை கடந்த செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணிகளுக்கு கடந்த ஜூலை மாதத்தில் ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில், கால்வாய் தூர்வாரும் பணிக்கு குறுகிய கால டெண்டர் விடப்பட்டு, நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த டெண்டரில் பங்கேற்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது, புதிதாக பதிவு செய்த 2 ஒப்பந்த நிறுவனங்கள் டெண்டர் எடுக்க விண்ணப்பித்தன. இந்த நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறை அனுமதித்துள்ளது. அதாவது விதிகளை மீறி, உயர் அதிகாரி ஒருவரின் பரிந்துரையை ஏற்று மேற்கண்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு மணப்பாக்கம், ஓட்டேரி நல்லா, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாருவதற்கு டெண்டர் தரப்பட்டுள்ளது.

இந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் மிதவை இயந்திரம், ஜேசிபி இயந்திரம் வைத்திருக்க வேண்டும். ஆனால், கால்வாய் தூர்வாரும் பணியை ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களிடம் இயந்திரம் எதுவும் இல்லை. இதனால், வெளியில் வாடகைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும், ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் கடந்த 13ம் தேதி முதல் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தொடக வேண்டும் என்று பொதுப்பணித்துறை உத்தரவிட்டது. ஆனால், அக்டோபர் மாதம் தொடங்கி விட்ட நிலையில் பல இடங்களில் தற்போது வரை தூர்வாரும் பணிகள் தொடங்கப்படவில்லை.

அக்டோபர் 2வது வாரத்தில் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வரை முன்னெச்சரிக்கை பணிகள் தொடங்கப்படாததால் சென்னை மீண்டும் வெள்ளத்தில் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: