கிராம சபை கூட்டங்களை ரத்து செய்த தமிழக அரசுக்கு திமுக கண்டனம்: திட்டமிட்டபடி ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: வேளாண் சட்டத்துக்கு எதிராக ஊராட்சி தலைவர்கள் அனைவரும் திரண்ட அச்சத்தால் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அதிமுக அரசின் இந்த ஜனநாயக விரோதபோக்கை கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டபடி ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களை சந்திப்பார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடர்பாக இன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன என்று ஈரோடு கலெக்டர் கதிரவனை முதலில் அறிவிப்பு வெளிட வைத்து - பிறகு, “அரசு கொடுத்துள்ள கூட்டப் பொருள் தவிர, வேறு தீர்மானங்களை ஊராட்சித் தலைவர்கள் நிறைவேற்றக் கூடாது” என்று திருச்சி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநரை விட்டு உத்தரவு அனுப்ப வைத்து - கபட நாடகத்திற்கான ஒத்திகை பார்த்து- ஊராட்சி மன்றத் தலைவர்கள் யாரும் அஞ்சவில்லை என்பதால்; கடைசி முயற்சியாக, முதல்வரே தலையிட்டு, இப்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், இன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்களை அடிப்படையின்றி ரத்து செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய பா.ஜ. அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாட்டில் எழுந்துள்ள எதிர்வினை அலைகளை ஒட்டி, நான் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் மத்தியிலேயே, அமோக ஆதரவு திரண்டு வருவதைத் தெரிந்து கொண்டுள்ள அதிமுக அரசு, மிரட்டல் முயற்சிகளில் எல்லாம் இறங்கியது. ஆனால் தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று, எங்கே அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்களும் - கட்சி சார்பற்ற முறையில் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்கள் என்று எடப்பாடிக்கு கிடைத்த கடைசித் தகவல் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆகவேதான் கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்து முதல்வர் பழனிசாமியே உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

உள்ளாட்சி மன்றங்களின் ஜனநாயகக் குரலை நெரிக்க கொரோனா என்று அலறுவது ஏன்? அ.தி.மு.க. என்றால் கொரோனாவே இல்லை; தி.மு.க. ஒரு ஜனநாயகாக் கடமையாற்ற வந்தால் கொரோனா வந்து விடுகிறதா? முதலமைச்சருக்கு நேர்மையும் நெஞ்சுரமும் இருந்தால், அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்களை விட்டு வேளாண் சட்டங்களை ஆதரித்து தீர்மானம் போடுங்கள் என்று அறைகூவல் விடுத்திருக்க வேண்டியதுதானே. தன் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் கூட செல்வாக்கை இழந்திருக்கும் முதல்வர் - இப்போது “கிராமசபைக் கூட்டங்களே வேண்டாம்” என்று அறிவிக்க வைத்திருக்கிறார். கிராம ராஜ்யம் காணப் பாடுபட்ட அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளில், இப்படியொரு ஜனநாயக விரோதத் தாக்குதலை நடத்தியிருக்கும் முதல்வரை விவசாயிகள் மன்னிக்கவும் மாட்டார்கள்; காந்தி அடிகளின் நினைவுக்குச் செய்யப்படும் துரோகத்தை மறக்கவும் மாட்டார்கள்.     

     

ஆனால் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக அறிவித்த பணியை, நிச்சயம் செய்து முடிக்கும். ஏற்கனவே திட்டமிட்டபடி - கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதே நேரத்தில் - திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும், கிராம மக்களைச் சந்திக்க வேண்டும். அவர்களிடம் அ.தி.மு.க. அரசின் அருவருக்கத் தக்க முகத்தை - வேளாண் சட்டங்களை ஆதரித்து மத்திய பா.ஜ. அரசுக்கு அஞ்சி - விவசாயிகளை அடிமையாக்கியுள்ள வஞ்சக நாடகத்தை, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

* ராகுல் காந்தியை பிடித்து தள்ளி மரியாதை குறைவாக நடத்துவதா? மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

அகில இந்தியக் கட்சித் தலைவர் ஒருவரை, நாடாளுமன்ற உறுப்பினரை, செயல்பட விடாமல் தடுத்தது மட்டுமல்ல, அவரைப் பிடித்துத் தள்ளுவது, மரியாதைக் குறைவானது, மனிதநேயமற்றது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உ.பி.யில் பாலியல் கொடுமையால் பலியான பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தியை ஓர் அகில இந்தியத் தலைவர் என்றும் பாராமல், பிடித்துத் தள்ளி மரியாதைக் குறைவாக நடத்துவது மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது இதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: