நாளை காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: நாளை காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: நாளை (2ம் தேதி) காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதில், அனைத்து பிரிவு கிராம மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். கூட்டம் நடைபெறுவது குறித்து கிராம மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.

கொரோனா தொற்று காலத்தில் கிராம சபை கூடும்போது அரசு விதித்துள்ள தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்திட வேண்டும்.

அதன்படி, கிராம சபை கூட்டவுள்ள இடம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் இருப்பின் தொடர்புடைய ஊராட்சியின் கிராம சபையானது வேறொரு நாளில் மாவட்ட ஆட்சி தலைவரின் அனுமதியுடன் நடத்தலாம். காய்ச்சல், சளி, இருமல் மற்றும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் கலந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வயதானவர்கள், கைக்குழந்தைகள் கலந்துகொள்ளக் கூடாது.

கூட்டத்தை பொது வெளியிலோ அல்லது காற்றோட்டமான கட்டிடத்திற்குள்ளோ நடத்திட வேண்டும். கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கூட்டம் தொடர்பான அறிக்கையினை வருகிற 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: