ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது: அக்.16ல் 6 மாவட்டங்களில் அமல்

முதல்வர் எடப்பாடி தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும், 6 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ேசாதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டன.  இந்த திட்டத்தின்படி ஸ்மார்ட் கார்டு வைத்துள்ள யாரும் தமிழகத்தில் எந்த நியாய விலை கடைகளிலும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

இதற்காக,  அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்படுகிறது. இந்த நடைமுறையின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும். அதே நேரத்தில் அந்த ஸ்மார்ட் கார்டை மற்றவர்கள் கொண்டு வந்தால் பொருட்களை பெற முடியாது. இந்த பயோ மெட்ரிக் கருவிகள் மாநிலம் முழுவதும் 35,233 ரேஷன் கடைகளிலும் வைக்கும் பணி நடந்து வருகிறது.  மேலும், இந்த பயோ மெட்ரிக் கருவி பயன்பாடு குறித்து விற்பனையாளர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, இன்று முதல் விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்களை வாங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். அதன்படி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, நாகை, தென்காசி, தேனி, நீலகிரி, கரூர், திருப்பூர், வேலூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல், திருவாரூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கோவை, சிவகங்கை, கடலூர், திண்டுக்கல் ஆகிய 32 மாவட்டங்களில் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வருகிறது.

அதேநேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், விருதுநகர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் அக்.16ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் தற்போது 28 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில்  விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் வைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், 32 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதல்வர் எடப்பாடி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. மேலும், தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும், அங்கு இருக்கக் கூடிய ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கடைகளில் ரேஷன் பொருட்கள் இல்லை என்ற நிலை இருக்காது.

இந்த திட்டத்திற்காக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதோடு கடை ஒன்றிற்கு 5 சதவீதம் பொருட்கள் கூடுதலாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு செல்பவர்கள் அந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். பயோ மெட்ரிக் முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் முழுமையாக பயோ மெட்ரிக் அமல்படுத்தாத நிலையில் என்ன செய்யலாம் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: