தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நாளை முதல் அமல்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்.!!!

சென்னை: தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார். ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ என்ற மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நாடு முழுமைக்கும் பொருந்தும் வகையிலான  பொதுவான வடிவமைப்பில் ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மாநில அரசுகள் அதே வடிவமைப்பு முறையைப் பின்பற்றி புதிய ரேசன் கார்டுகளை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 2020ம் ஆண்டு ஜூன் 1-ம்  தேதியிலிருந்து நாடு முழுமைக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்கிடையே, தமிழகத்தில் பரிட்சார்த்த முறையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் கடந்த 1.1.2020 முதல் 29.2.2020 வரை அமல்படுத்தப்பட்டது. இவர்கள், அந்த மாவட்டங்களுக்குள் எங்கு  வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே, இந்த திட்டம் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 ஆனால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இத்திட்டம் செயல்படுத்துவது தள்ளி சென்றுகொண்டே சென்ற நிலையில், அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே  ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ், கடந்த ஜூன் மாதம் தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த 23-ம் தேதி, ஒரே நாடு ஒரே ரேஷன் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில்  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தப்படி நாளை திட்டத்தை துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள  ரேஷன் கடைகளில் நாளை முதல் கைரேகையை பதிவு செய்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் மூலம் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் வேண்டும் ஆனாலும், எந்த ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான  பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பார்கள்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: