கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் மக்களுக்கு அனுமதி எப்போது? அரசு, மாநகராட்சி பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் ‘மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மீனவர் நலன் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், ஆலோசனைகளையும் வழங்கினர். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு துறைகளில் தளர்வுகள் வழங்கபட்டுள்ளது. மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா? என்று அரசு வக்கீலிடம் நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், பொதுமக்களை இன்னும் அனுமதிக்கவில்லை. கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை அக்டோபர் 5ம் தேதி தெரிவிக்க வேண்டும். புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: