கோவிட் நோய் சிகிச்சையில் நிலையான வழிமுறை கடைபிடிக்கப்படுகிறதா என கலெக்டர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: கோவிட் நோயிக்கு நிலையான சிகிச்சை வழங்கப்படுகிறதா என்பதை கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் நோய் தொற்றின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான தளர்வுகளுடன் மக்களின் நலன் கருதி பொது முடக்கத்தை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுவரை கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சுமார் ரூ.7,323 கோடி செலவு செய்துள்ளது. இதில் மருத்துவம் சார்ந்த செலவினம் ரூ.1,983 கோடி, நிவாரணம் சார்ந்த செலவினம் ரூ.5,340 கோடி.

நாட்டிலேயே சிகிச்சை முடிந்து குணமானவர்கள் 90.50 சதவீதத்துக்கு மேல் உள்ள மாநிலமாகவும், மிக குறைவான அதாவது 1.60% இறப்பு உள்ள மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது. பொதுமக்களிடம் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், மூச்சு திணறல், உடல் சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுத்தன்மை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் 24 மணி நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை மாவட்ட கலெக்டர்கள்  ஏற்படுத்த வேண்டும். கோவிட் பரிசோதனையின்போது மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளோரின் மாதிரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டு, விரைந்து முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

 

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோய் சிகிச்சை குறித்த நிலையான வழிமுறைகள் கடைபிடிக்கப்படுறதா என்பதை மாவட்ட கலெக்டர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் விதமாக மாவட்ட கலெக்டர்கள், சுகாதார துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் கூட, இதுவரை 42  புதிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் துவங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன்மூலம், சுமார் ரூ.31,464 கோடி முதலீடும், சுமார் 69,712 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளன. கொ ரோனா காலகட்டத்தில் 2,37,090  சுய உதவி குழுக்களுக்கு, ரூ.8,557 கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, ஏற்கனவே இருந்த தடைகளெல்லாம் படிப்படியாக குறைக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் படிப்படியாக இயல்புநிலை வருவதற்கு அரசால் முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: