பவானிசாகர் அணை நீர்மட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தம்

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணை நீர்மட்டம் அளவு குறித்து சிசிடிவி கேமரா பொருத்தி உயரதிகாரிகள் ஆன்லைனில் கண்காணிக்கும் வசதி தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீர்மட்டத்தை கண்காணிப்பதற்காக அணையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் அளவீடு அறையில் உள்ள அளவீட்டு கருவியின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு அதன் விவரத்தை தொலைபேசி மூலம் பவானிசாகர் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு தெரிவித்து கணக்கிடுவது நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் தற்போது உயரதிகாரிகள் பவானிசாகர் அணை நீர்மட்டத்தை நேரடியாக கண்காணிக்கும் வகையில் தண்ணீர் அளவீடு கருவி அமைந்துள்ள பகுதியில் தற்போது சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த சிசிடிவி கேமராவின் மூலம் தண்ணீர் அளவிடும் கருவியில் உள்ள அளவினை பவானிசாகர் அணை கோட்ட செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் அலுவலகத்தில் உள்ள கணக்கீட்டு அலுவலர் ஆகிய மூன்று பேர் அறிந்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அணையின் மேல் பகுதியில் உள்ள தண்ணீர் அளவீடு எடுக்கும் அறையிலிருந்து பணியாளர்கள் தகவல் தெரிவிப்பதற்கு முன்பாகவே குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகாரிகளே அணையின் நீர்மட்டத்தை அறிந்து கொண்டு கணக்கீடு செய்ய இயலும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: