×

கொரோனா ஏற்படுத்திய திடீர் மவுசு மைக்ரோபயாலஜி படிக்க குவிந்த மாணவர்கள்: ஆய்வக படிப்புகள் மீது ஆர்வம்

அரசுக்கல்லூரிகளில் 85 சதவீத சேர்க்கை நிறைவு

சேலம்: தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 85 சதவீத சேர்க்கை நிறைவடைந்த நிலையில், கொரோனா காலத்தால் மைக்ரோபயாலஜி படிப்பில் சேர மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ், 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக முதலாம் ஆண்டு இடங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக, நடப்பாண்டு முதன்முறையாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள முதல்தர அரசு கலைக்கல்லூரிகளில் (25 ஆண்டுகளுக்கு மேல் உள்ள) 90 சதவீத இடங்களும், இதர கல்லூரிகளில் 80 சதவீத இடங்களும் நிரம்பிவிட்டன. தற்போது காலியாக உள்ள ஓரிரு இடங்களும் விரைவில் நிரப்பப்படவுள்ளது.

இதனிடையே, நடப்பாண்டு கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த நீட்சி, அரசுக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையிலும் எதிரொலித்தது. அதாவது, வைரஸ் தொடர்பான ஆய்வு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் ஒன்றான பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவில் சேர வழக்கத்தை விட மாணவர்கள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். இதனால், அனைத்து கல்லூரிகளிலும் அந்த பிரிவு வேகமாக நிரம்பியது. இதுகுறித்து அரசுக்கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது: அரசுக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் விருப்ப பாடம் என்பது, அந்தந்த காலகட்டத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு வருகிறது. நடப்பாண்டு யாரும் எதிர்பாராத வகையில், இளங்கலை மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவுக்கு கடும் போட்டி நிலவியது. பெரும்பாலான கல்லூரிகளில் அந்த பாடப்பிரிவிற்கு 40 இடங்கள் மட்டுமே உள்ளன.

ஆனால், சராசரியாக 300 பேர் வரை மைக்ரோபயாலஜி பாடப்பிரிவை கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.  ஆய்வு படிப்பான மைக்ரோபயாலஜி பிரதானமாக பார்க்கப்படுகிறது. மேலும், கொரோனா தொற்றை உறுதி செய்வதில், ஆய்வகத்தினரின் பங்கு முக்கியம். இதனால், வரும் காலங்களில் இதற்காக வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற காரணத்திற்காகவே, நடப்பாண்டு அந்த படிப்புக்கு அதிக போட்டி இருந்தது. இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags : Corona , Students flock to study Corona's sudden mausoleum microbiology: interest in laboratory courses
× RELATED மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நனவாகியது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி