கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசிக்க புதிதாக 10 இடங்கள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் புதிதாக 10 சுற்றுலா இடங்களை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட சுற்றுலா அலுவலர் தெரிவித்தார். கொடைக்கானலில் விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். தற்போது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ள கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய பூங்காக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதனிடையே கொடைக்கானலில் சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்தார். உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் வரவேற்றார்.

விழாவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் பேசுகையில், ‘‘தமிழகம் முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்த கமிட்டிகள் அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல கொடைக்கானல் பகுதியில் லோகேஸ்வரன், பிரசன்னா ஆகியோர் கொண்ட குழுவினர் இரண்டு கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து கொடைக்கானலில் பேத்துப்பாறை, பள்ளங்கி, ஓராவி அருவி, பூம்பாறை, புலவச்சி ஆறு, கொடைக்கானல் நகர் பகுதியில் சிட்டி வியூ, சலேத் அன்னை ஆலயம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களை புதிய சுற்றுலா இடங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கோட்டை மாரியம்மன் கோவில், மலைக்கோட்டை, பழநி கோவில் ஆகிய பகுதிகளும் புதிய சுற்றுலா இடங்களாக அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கு உரிய அடிப்படை வசதிகள் தயாராகி வருகிறது. கொடைக்கானலில், அருவி சுற்றுலா என்ற பெயரில் புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: