கேரளாவில் அக்.15க்கு பின் சுற்றுலா தலங்கள் திறப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் அக்டோபர் 15ம் தேதிக்குப் பிறகு சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று  இம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து உள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. கேரளாவில் ஊரடங்கின்போது முழுமையாக மூடப்பட்ட சுற்றுலா மையங்கள் 7 மாதங்களுக்கு பிறகு சுகாதாரத் துறை வழிகாட்டுதல்களின்படி மீண்டும் திறக்கப்படுகிறது. இதில், பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். மத்திய அரசின் படிப்படியான தளர்வுகள் வழிகாட்டுதலை தொடர்ந்து, கேரளாவில் தற்போது தனியார் ஓட்டல்களும் ரிசார்ட்டுகளும் மீண்டும் செயல்பட தொடங்கி இருக்கின்றன.

இதையடுத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தள்ளுபடிகள் உள்பட தொகுப்புகள் அறிவிக்கப்பட்டதால் ரிசார்ட்ஸ்கள் வார இறுதி நாட்களில் களைகட்டி வருகின்றன.இந்நிலையில், கேரளாவில் அக்டோபர் 15க்கு பிறகு சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்படும். உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பிரசாரங்களும் நடத்தப்படும் என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘சுற்றுலாத் தலங்களை திறக்கும்போது கிராமப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சுற்றுலா இயக்கம் சார்பில் 5,432 பேருக்கு சுயவேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: