பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் குழந்தைகளை அனுமதிக்க வேண்டும்: பக்தர்கள் வாக்குவாதம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீபவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 16 அல்லது 17ம் தேதி தொடங்கி 10 வாரங்கள் நடைபெறும். இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் வருவார்கள். அவர்கள், சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கோயில் திறக்கப்படாமல் இருந்தது. இதனால், கொரோனா பிரச்னை காரணமாக உபயதாரர்கள், பக்தர்கள் யாருக்கும் கோயிலில் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். மேலும், கோயிலை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், ஆடி மாத வெள்ளிக்கிழமை பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்த பக்தர்களை கூட அனுமதிக்காமல் போலீசார் திருப்பி அனுப்பினர். இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் கோயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டதாலும், 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியதாலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பெரியபாளையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

அதன்பிறகு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கை குழந்தை முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை குடும்பத்துடன் கோயிலுக்கு அழைத்து வரும் பக்தர்களை கோயில் நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை. இதனால், பெண்கள் எங்கள் குழந்தைகளை விட்டு விட்டு நாங்கள் மட்டும் எப்படி சாமி தரிசனம் செய்வது என கோயில் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர். ஆனால், கோயில் நிர்வாகத்தினர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு விதிகளை நாங்கள் கடைப்பிடித்து தான் ஆகவேண்டும் என கூறினர். இதனால், பெண்கள் தங்களுடன் வரும் உறவினர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டும் அம்மனை தரிசனம் செய்து விட்டு வருகிறார்கள். பின்னர், அந்த உறவினர்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். இதனால், காலதாமதம் ஏற்படுவாதாகவும், சரியான நேரத்தில் தரிசனம் செய்து விட்டு வீடு திரும்ப முடியவில்லை என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

Related Stories: