கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நடுவில் நின்று செல்பி எடுக்கும் பொதுமக்கள்: உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

பள்ளிப்பட்டு: கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் நடுவில் நின்று பொதுமக்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கின்றனர். இதனால், உயிரிழப்பு அபாயம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை முழு கொள்ளளவு நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் 6 முறை நீர்தேக்க அணையிலிருந்து உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு பாய்ந்து பள்ளிப்பட்டு, திருத்தணி மார்க்கத்தில் பூண்டி நீர் தேக்கம் சென்றடைகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அணையிலிருந்து 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சீறிப்பாய்கிறது. வெள்ள அபாயம் குறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடர்ந்து கரையோர கிராம மக்களுக்கு எச்சரித்து வருகிறார். இருப்பினும், பொதுமக்கள் அச்சமின்றி வெள்ளப்பெருக்கு இடையில் ஆற்றை கடந்து செல்வதும், குடும்பம் குடும்பமாக வந்து வெள்ளத்திற்கு நடுவில் குளித்து விளையாடுவது, செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்வது போன்ற சம்பவங்களால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, ஆற்றுப்படுக்கை பகுதிகளில் வருவாய்த்துறை, காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Related Stories: