திருத்தணி அருகே சாலை அமைக்க கோரி மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் கூலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாவூர் கிராமத்தில் இருந்து திருவள்ளூர், சென்னை பகுதிகளுக்கு செல்லவேண்டுமென்றால் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று பேருந்து மூலம் சென்று வருவார்கள். இந்நிலையில், அந்த கிராமத்திற்கு செல்லும் சாலை கனகம்மாசத்திரம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பல வருடங்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த சாலை பழுதடைந்ததால் அதை சீரமைக்கும் பணியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த பணியை செய்த ஒப்பந்ததாரர் சாலையின் 2 புறங்களிலும் அகலப்படுத்தினார். இதனால் ஏற்கனவே சாலை தன் பட்டாநிலத்தில் செல்கிறது என கூறி ஜெயராமன், நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்றத்தில் ஜெயராமனுக்கு சாதகமான தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நேற்று ஜெயராமன் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தன்னுடைய பட்டா நிலத்தை கொம்புகள் நட்டு வேலி அமைத்துள்ளார். இந்த வேலி அமைத்திருப்பதால் கிராமத்திற்கு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவூர் கூட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்த திருத்தணி ஆர்.டி.ஓ சத்யா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: