கலாச்சார குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டம்!! கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பரிசீலனை!! தென்னிந்தியர்களுக்கு இடம் கிடைக்கும் வகையில் மாற்றம்!

டெல்லி: கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து கலாச்சார குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய இந்திய கலாச்சாரத்தை பின்னோக்கி சென்று ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கடந்த 14ம் தேதி அமைத்தது. இந்த குழுவில் தென்னகத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. மேலும் சிறுபான்மையினத்தவர், பட்டியலினத்தவர் மற்றும் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டன குரல் எழுப்பினர். கலாச்சார குழுவில் தமிழ் அறிஞர்கள் இடம்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார். தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சனை எதிரொலித்தது. கடும் எதிப்பு எழுந்ததையடுத்து தற்போது கலாச்சார குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எம்.பிக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கைகளை கலாச்சார அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே கலாச்சார குழுவை மாற்றி மத்திய அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: