மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிலும் இந்தாண்டே இடஒதுக்கீட்டை அமல்படுத்த தி.மு.க கோரிக்கை!! மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எம்.பி.வில்சன் கடிதம்!!!

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மருத்துவப் படிப்பு அகில இந்திய மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்த வேண்டுமென்று திமுக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான எம்.பி. வில்சன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்பதால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இந்த கல்வியாண்டே இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரிய வழக்கில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 27ம் தேதி உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்களான 506 இடங்களை மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட உள்ளது. எனவே இடஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்தினால் தமிழக அரசு இடஒதுக்கீடு சட்டப்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 203 இடங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: