ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல்: நாளை அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்.!!!

சென்னை: அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து சர்ச்சை நிலவும் பரபரப்பான சூழ்நிலையில் அந்த கட்சியின் செயற்குழு நாளை கூட இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் அடுத்த மே மாதம் சட்டமன்ற பொதுத்  தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் சூழலில் ஆளும் கட்சியான அதிமுக ஜெயலலிதா இல்லாமல் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது. எனவே முதலமைச்சர் வேட்பாளர்  யார்?  என்பதில் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சரான பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் நிலவி வருவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அதிமுக அவை தலைவர் மதுசூதனனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, ஓ. பன்னீர் செல்வமும் மதுசூதனனை சந்தித்து பேசினார். அவை தலைவர் என்ற முறையில் அதிமுக செயற்குழு  கூட்டத்தை மதுசூதனன் தலைமை தாங்கி நடத்த இருக்கிறார். அதிமுக செயற்குழுவில் 250 பேர் பங்கேற்க உள்ளார்கள். செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள், வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி உள்பட பல்வேறு விவாதங்கள்  குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. செயற்குழு கூட்டத்தைத்தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு  பொதுக்குழுவில்தான் ஒப்புதல் வழங்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

Related Stories: