தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% வனத்துறையில் பணி வழங்கக்கோரிய வழக்கு: தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை:  தமிழக வனத்துறையில் 158 தொழில் பழகுனர் (அப்ரன்டிஸ்) பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் கடந்த 2018 ஜூலை 4ம் தேதி வெளியிட்டது. அந்த அறிவிப்பில், வனத்துறை அப்ரன்டிஸ் பணிக்கு வனவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வனவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இல்லாத பட்சத்தில் தமிழ் வழியில் வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.  இந்நிலையில், தமிழ்நாட்டில் வனவியல் படிப்பு தமிழ் மீடியத்தில் இல்லை. இதையடுத்து, தங்களுக்கு பணிக்கான வாய்ப்பு தருமாறு உத்தரவிடக்கோரி ஜீவனா, ஆனந்தன், கலாவதி உள்ளிட்ட 9 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 9 பேரும் மேல் முறையீடு செய்தனர்.

 இந்த மேல்முறையீடு வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவில், “ தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வனவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இல்லை என்றால் மட்டும் தமிழ் வழியில் மற்ற பட்டப் படிப்புகளை படித்தவர்கள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று விதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே, வனவியல் படிப்பு முடித்தவர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழ் வழியில் வனவியல் படிப்பு இல்லை என்ற  காரணம் காட்டி மனுதாரர்கள் உரிமை கோர முடியாது. எனவே, இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

Related Stories: