பாதி மேற்கூரை மாயம்.. கயிறுதான் கதவுக்கு பூட்டு.. ஊழியர்கள் இருப்பது இல்லை.. அரசு நெல் கொள்முதல் நிலையத்தின் அவலம்

* மழையில் நனைந்து வீணாகும் நெல்

* அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

ஆரல்வாய்மொழி:  நாடு முழுவதும் விவசாயத் தொழில் நலிவடைந்து வருகின்ற நிலையில் பெரும்பாலான விவசாயிகள் வறுமை கோட்டிற்கு கீழ் தான் உள்ளனர். குறிப்பாக குமரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிடுகின்ற பொருட்களுக்கு போதுமான விலை நிர்ணயம் இல்லாமல் நஷ்டத்தில் இருந்து வருகின்றனர்.குறிப்பாக நெல் பயிர் செய்கின்ற விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தோவாளை தாலுகாவில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகின்றது. இதில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. அரசானது விவசாயிகளின் நலன் கருதி அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளது.

தோவாளை தாலுகாவில் செண்பகராமன்புதூரிலும், தாழக்குடியிலும் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. தாழக்குடியில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான சமுதாய நல கூடத்தில் அறுவடை நேரங்களில் மட்டும் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் செண்பகராமன்புதூரில் உள்ள நெல்கொள்முதல்  நிலையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதுவும் அறுவடை காலங்களில் மட்டுமே இயங்கி வருகிறது.இந்நிலையில் செண்பகராமன்புதூரில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் பல கட்டுப்பாடுகளுடன் வாங்கும் நெல்லை எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெட்ட வெளியில் குவித்து விடுகின்றனர். இதனால் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகின்ற தரமான நெல் மழையில் நனைந்து நாசமாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் இங்கு போடப்பட்டுள்ள மேற்கூரை முழுவதும் பெயர்ந்து காணப்படுகிறது.

இங்கு இரவு நேரங்களில் எந்த ஊழியர்களும் பணியில் இருப்பதில்லை. விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகின்ற தரமான நெல் பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் போடப்பட்டுள்ளதால் மழையில் நனைவதுடன் இரவு நேரங்களில் யாராவது நெல்லை திருடி சென்றாலும் யாருக்கும் தெரியாத நிலையுள்ளது. மேலும் இந்த கொள்முதல் நிலையத்தின் முன்பக்க கதவை வெறும் கயிற்றை கொண்டு கட்டி வைத்துள்ளனர். ஆனால் வளாகத்தில் பல லட்சம் மதிப்பிலான கொள்முதல் செய்யப்பட்ட நெல் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அஜாக்கிரதையாக உள்ளனர்.இது குறித்து தாழக்குடி பகுதியை சேர்ந்த விவசாயி ரவிப்பிள்ளை கூறியதாவது: தோவாளை தாலுகாவில் கடுக்கரை, அருமநல்லூர், அழகியபாண்டிபுரம், தாழக்குடி, மற்றும் தோவாளை போன்ற பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.

ஆண்டுக்கு இரண்டு முறை நெல் பயிரிடப்படுகிறது. அதாவது ஜூன் மாதம் நடவு செய்து ஆகஸ்ட், மற்றும் செப்டம்பரில் அறுவடை செய்யப்படுகிறது. அது போன்று நவம்பரில் நடவு செய்யப்பட்டு மார்ச் மாதம் அறுவடை செய்யப்படுகின்றது. இவ்வாறு அறுவடை செய்யப்படுகின்ற நெல்லை ஈரப்பதம் இல்லாதவாறு காய போட்டு பின்னர் அரசு கொள்முதல் நிலையங்களான தாழக்குடி, மற்றும் செண்பகராமன்புதூர் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறோம்.

தற்போது 17% ஈரப்பதம் உள்ள நெல்லினை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர் அதற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை திருப்பி அனுப்பி விடுகின்றனர். ஆனால் நாங்கள் அறுவடை செய்து ஈரபதத்தினை குறைப்பதற்காக மழைக்காலங்களில் மிகவும் சிரமப்பட்டு காய வைத்து தரமான நெல்லினை செண்பகராமன் புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தால் அவர்கள் எங்களிடம் வாங்குவதற்கு மட்டுமே கெடுபிடி செய்கின்றனர். ஆனால் தரமான நெல்லை முறையாக பாதுகாப்பாக வைக்காமல் திறந்த வெளியில் போட்டு விடுகின்றனர். இதனால் நெல் மழையில் நனைந்து நாங்கள் கொடுத்த தரமான நெல்கள் ஈரபதம் மிகுந்த தரமற்ற தன்மையில் கிடக்கின்றது. இதனால் அரசுக்கு மிகவும் இழப்பீடு ஏற்படுகிறது.

தோவாளை தாலுகாவில் நெல் பயிர் செய்வது அதிகமாக உள்ள நிலையில் அரசு கட்டிடத்தில் இயங்கும் செண்பகராமன் புதூர் நேரடி கொள்முதல் நிலையமானது அறுவடை காலத்தில் மட்டுமே திறக்கப்படுகிறது. அதுவும் நாங்கள் விற்பனை செய்ய நெல்லை கொண்டு சென்றால் எப்போதும் ஊழியர்கள் இருப்பதில்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி அரசு கட்டிடத்தில் இயங்குகின்ற செண்பகராமன் புதூர் நேரடி கொள்முதல் நிலையத்தினை தினமும் திறப்பதற்கும், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை காய வைக்க கொட்டகை அமைக்க வேண்டும் என்பதுடன், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை பாதுகாப்பாக வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிப்பதாக கூறினார்.

Related Stories: