வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் பணி 90 சதவீதம் நிறைவு: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்

சென்னை: வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. வரும்  ஜனவரியில் சேவையை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.   சென்னையில் மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டம் வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு  நீட்டிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இவ்வழித்தடத்தில் சேவையை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு  காரணமாக நீட்டிப்பு பணிகள் அனைத்தும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் ஜூலை மாதம் மீண்டும் தொடங்கியது.

தற்போது, 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் இவ்வழித்தடத்தை மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர்  ஆய்வு செய்ய உள்ளதாகவும் மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டது. மேலும், ரயில்  நிலையங்கள் அமைக்கும் பணி, சுரங்க ரயில் நிலையங்களுக்கு செல்லும் வழிகள், தண்டவாளம், சிக்னல் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. ஒருசில பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றை முழுமையாக முடிக்க பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. இதேபோல், விம்கோ நகரில் 2ம்  பணிமனை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. 2021 ஜனவரி மாதத்திற்குள் இவ்வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மக்களின் பயன்பாட்டிற்கு  கொண்டுவரப்படும்.இவ்வாறு கூறினார்.

Related Stories: