திருவல்லிக்கேணி பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள்

சென்னை: திருவல்லிக்கேணி ராகவன் தோட்டம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பைப்லைன் உடைப்பு காரணமாக  கடந்த ஒரு மாதமாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், வயிற்றுபோக்கு போன்றவை அடிக்கடி  ஏற்படுகிறது. இதுபற்றி 9வது அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தபோது, இது எங்களுடைய கட்டுப்பாட்டில் வராது. எனவே, மெட்ரோ குடிநீர் வாரிய  உதவி பொறியாளரை தொடர்புகொண்டு புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். அதன்படி மெட்ரோ குடிநீர் வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்தபோது, எதிர் முனையில் பேசிய பெண் அதிகாரி,  அப்படியா பார்க்கலாம் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் நோய் தொற்று அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் அரசு சமூக இடைவெளியுடன்  சுத்தமாக இருக்க வேண்டும் என்று விளம்பரம் செய்கிறது. ஆனால் எங்கள் பகுதியில் வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும்  அதிகாரிகள் அலட்சியமாகவும், மரியாதை இல்லாமலும் நடத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுத்து, சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: