வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 250 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

சென்னை: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் 250 இடங்களில் விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.  விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளுக்கு, தனியார்களுக்குச் சாதகமானவை. விவசாயத்தையும், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் அழிப்பவை என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் இந்த சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் இந்த 3 சட்டங்களுக்கு எதிராக 25ம் தேதி (நேற்று) பாரத் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழகத்தில் அன்றைய தினம் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்தன. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. விவசாயிகள் அறிவித்தப்படி நேற்று காலை தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிராகவும், சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் தண்டையார்பேட்ைட தபால் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், திடீரென தபால் நிலையம் முன்பு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையில் படுத்துக்கொண்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதனால், மறியலில் ஈடுபட்டவர்கள் உடன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் ேபாராட்டம் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இதனால், அப்பகுதியில் இருபுறங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக குண்டுகட்டாகவும், தூக்கி சென்றும், தரதரவென இழுத்து சென்றும் போலீஸ் வேனில் ஏற்றினர். சென்னையில் தாம்பரம் பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை அருகில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணை தலைவரும், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜிஎஸ்டி சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாய சட்ட மசோதா நகல்களை எரித்து கோஷமிட்டனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கே.பாலகிருஷ்ணன் உட்பட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நல்லூர் சுங்க சாவடி அருகில் சென்னை - கொல்கத்தா சாலையில் மாநில விவசாயிகள் சங்க பொது செயலாளர் சண்முகம் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் கொல்கத்தா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சட்டை அணியாமல் மண்டை ஓடு, கை, கால் எலும்புகளுடன், விலங்கு போட்டதுபோல் சங்கிலியால் கைகளை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமையிலான விவசாயிகள் முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். அவர்களை அலுவலகத்திற்குள் நுழையாமல் தடுக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் போடப்பட்டிருந்தது. இதனால், விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், போராட்டத்தில் ஈடுபட்டதாக தஞ்சையில் 840 பேர், நாகையில் 500 பேர், கரூர் மாவட்டத்தில் 300 பேர், பெரம்பலூரில் 100 பேர், அரியலூரில் 100 பேர், புதுக்கோட்டையில் 454 பேர், திருவாரூரில் 600 பேர், திருவண்ணாமலை 720, கடலூர் 381, விழுப்புரம், 230, கள்ளக்குறிச்சி 108 என பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போன மாநில அரசை கண்டித்தும் வருகிற 28ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட தலைநகரங்கள், நகரங்கள், ஒன்றியங்கள் ஆகிய இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: