பாளை. சாந்திநகரில் குப்பை கொட்டும் இடமாக மாறிய இந்து அறநிலையத்துறை காலியிடம்- உரிய நடவடிக்கைக்கு மக்கள் வலியுறுத்தல்

நெல்லை : பாளை சாந்திநகரில் உள்ள இந்துசமய அறநிலையத்துறைக்குரிய காலியிடம், குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது. பாளை. சாந்திநகரில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது இந்த காலியிடம் குப்பை கொட்டும் பகுதியாக மாறியுள்ளது. அவ்வவ்போது குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்பவர்கள் மற்றும் அருகில் குடியிருக்கும் மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோயால் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் பவுல்ராஜ் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி முட்செடிகள் நிறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக இந்த இடத்தில் ஒரு கொலையும், தற்கொலையும் நடந்தது. இதுபோன்ற சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்காக, சாந்திநகர் ெபாதுநல அபிவிருத்தி சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் செலவில் அந்த இடத்தை சுத்தம் செய்தோம். இந்த இடத்தை சுற்றியுள்ள சாந்திநகர், காமராஜ்நகர், ரஹ்மத்நகர், போலீஸ்காலனி மற்றும் திம்மராஜபுரம் பகுதிகளில் தனியார் பள்ளிகளே அதிகம் உள்ளன.

எனவே அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த இடத்தில் அரசு சார்பில் ஒரு பள்ளிக்கூடமோ  அல்லது நூலகமோ அமைத்து கொடுத்தால் சுற்றுப்புற மக்களுக்கு பயனுள்ளதாக  இருக்கும் என்று அறநிலையத் துறைக்கும், மாநகராட்சிக்கும் பல மனுக்கள் அளித்தோம். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்பகுதி மக்களின் நலன் கருதி அறநிலையத்துறையும், மாநகராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories: