நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு! - வேறு அமர்வுக்கு மாற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை!!!

சென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்தாண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் தொடர்பாக நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை நடத்தலாம், ஆனால் பதிவான ஓட்டுகளை எண்ண கூடாது என இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதே வேளையில் இந்த தேர்தலானது முறையாக நடைபெறவில்லை என்றும், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் சங்கத்தின் உறுப்பினர் ஏழுமலை உள்ளிட்டோர் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் மறு தேர்தலை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால், மேல்முறையீடு மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கானது ஏற்கனவே நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிருந்தனர். அதாவது, தேர்தல் நடந்து முடிந்த பின்னர் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டுமே தவிர இதுபோன்ற சட்ட போராட்டம் மூலம் இருதரப்பினரும் என்ன சாதிக்க போகிறீர்கள்? என வினவினர். தொடர்ந்து மறுதேர்தல் நடத்த வேண்டுமென்றால் மேலும் ஒரு தேர்தல் அதிகாரியை நியமிக்கலாமா? என்றும் கேள்வி எழுப்பினர். அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலுக்கு ரூ.30 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது என்றும் மீண்டும் தேர்தலை நடத்த சாத்தியமில்லை என்றும் வாதிட்டிருந்தார்.

பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டுமா? அல்லது கடந்தாண்டு நடைபெற்ற தேர்தல் ஓட்டுகளை எண்ண வேண்டுமா? என இருதரப்பினருமே பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தனர். தற்போது இந்த வழக்கானது மீண்டும் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பிலும் மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். அதாவது ஒரு தரப்பில் தேர்தலை நடத்த கூடாது என்றும் , மற்றொரு தரப்பில் நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ண வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி தான் இந்த வழக்கை விசாரிக்க போவதில்லை என்றும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.   

Related Stories: