சென்னையில் நடந்த காய்ச்சல் முகாம்கள் மூலம் 26 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: சென்னையில் நடந்த 50 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் மூலம் 26 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1,56,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,44,511 பேர் குணமடைந்துள்ளனர். 3,091 பேர் மரணம் அடைந்துள்ளனர். 10,012 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் அறிகுறி உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிய சென்னை மாநகராட்சி சார்பில் மே 8 முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை 50 ஆயிரத்து 485 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.

இதன் மூலம் 26.12 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ள 1 லட்சத்து 52 ஆயிரத்து 955 பேர் கண்டறியப்பட்டனர். அதில் 1.05 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 23 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடன் சென்னையில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: