பாஜ ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ரூ.15 லட்சம் கேட்டு கோஷமிட்ட முதியவர் மீது சரமாரி தாக்குதல்

சென்னை: சென்னை நங்கநல்லூர் வோல்டாஸ் காலனியில் சுவர் விளம்பரம் எழுதுவது சம்பந்தமாக திமுக, பாஜ இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இதில் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நங்கநல்லூரில் நடந்தது. மாவட்ட தலைவர் சாய்சத்யன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் கரு.நாகராஜன் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென கூட்டத்திற்குள் புகுந்த ஒரு முதியவர் ‘முதலில் ரூ.15 லட்சத்தை கொடு அப்புறம்பேசு’  என்று கோஷம் எழுப்பினார். உடனே அங்கிருந்த பா.ஜவினர் அவரை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கி குண்டுக்கட்டாகத் தூக்கினர்.

அப்போது அந்த முதியவர், ‘ரூ.15 லட்சம், ரூ.15 லட்சம்’ என பலமுறை கோஷம் போட்டுக் கொண்டே இருந்தார். இதனால் ஆர்ப்பாட்டம் தடைபட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் முதியவரை வலுக்கட்டாயமாக மீட்டு பழவந்தாங்கல் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில், அவர் பழவந்தாங்கல் பி.வி.நகரை சேர்ந்த துரை (67) என தெரியவந்தது. வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி மோடி தராமல் ஏமாற்றி வருவதால்  பாஜவினரை கண்டதும் உணர்ச்சி வசப்பட்டு கத்தி கோஷமிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் முடிந்தபின் போலீசார் முதியவரை அனுப்பிவைத்தனர்.

Related Stories: