உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுப்பு: பொதுமக்கள் எதிர்ப்பு: பரபரப்பு

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது புல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆசனூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இடத்தில் மண் கொட்டுவதற்காக உரிய அனுமதி வாங்கி இருந்தனர். சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான ஏரியில் மட்டும் அரசு விதித்துள்ள அளவுக்கு மண் எடுத்து கொள்ள அனுமதி வழங்கி இருந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக அரசு விதிமுறைகளை மீறி சுமார் 10 அடி முதல் 15 அடி ஆழத்துக்கும் மேலாக பள்ளம் போட்டு ஏரியில் இருந்து மண்ணை எடுத்து வந்தனர்.

இதற்கு கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தொடர்ந்து பெரிய பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு மண் எடுத்ததால் நேற்று முன்தினம் காலை கிராம மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏரியில் இருந்து மண் எடுப்பதை நிறுத்திவிட்டு 30க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை எடுத்து சென்றனர். இதுகுறித்து இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், அரசு அனுமதி பெற்று தான் ஏரியில் இருந்து மண் எடுக்கிறோம் என ஐஓசி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறி வந்தனர். ஆனால் அதிகளவில் பள்ளம் போட்டு மண் எடுத்து வருவதால் இந்த ஏரியின் அருகில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணற்றில் வெகுவாக தண்ணீர் மட்டம் குறைந்துவிட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் புல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நேரில் வந்து பார்வையிட்டு அளவுக்கு அதிகமாக மண் எடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரியில் மண் அள்ளுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க எடைக்கல் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: