சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதியுள்ளதா? : தமிழக அரசு ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை, :சென்னை மெட்ரோ ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்ைக தாக்கல் செய்யுமாறு தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு ரயில் நிலையத்தில்கூட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்து தரப்படவில்லை.

 

கடந்த 2016ல் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்திற்கு முரணாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. இதுதொடர்பாக கடந்த 2017ல் தணிக்கை நடத்தி சட்ட விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை.

 இதை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையமும் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் வகையில் தற்போதுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் தமிழக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஆய்வு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டனர்.

Related Stories: