தொற்று குறைந்தாலும் சிகிச்சை வசதிகளை குறைக்கக்கூடாது: தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை: வைரஸ் தொற்று குறைந்தாலும் கொரோனா சிகிச்சை வசதிகளை குறைக்க கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 20ம் தேதி வரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 639 பேருக்கு கொரோனா உறுதியானது.  இதில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 857 பேர் குணமடைந்துள்ளனர். 3,058  பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு மற்றும் வரும் நாட்களில் தொற்று அதிகரித்ததால் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தனியார்  மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில்   மாநகராட்சி சுகாதார இணை ஆணையர் மதுசூதன் ரெட்டி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனைகளில் போதிய மருத்துவ உபகரணங்கள், படுக்கை வசதிகள், ஐசியூ வார்டுகள், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் போதுமான அளவு உள்ளதா  என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் கொரோனா தொற்று குறைந்தாலும் படுக்கை வசதிகளை குறைக்க கூடாது. சிகிச்சை பெறுபவர்களின் முழு விவரங்களை சேகரித்து முறையாக மாநகராட்சி அறிக்கை அளிக்க வேண்டும். தனி  நபர்களுக்கு முதல்வர் மருத்து காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகி பின்பற்ற வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஆணையர் பிரகாஷ் அறிவுரை  வழங்கினார்.

Related Stories: