அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய மாதிரி தேர்வில் கோளாறு இறுதி செமஸ்டர் தேர்வுகளை முறையாக எழுத உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: “அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:  சென்னை-அண்ணா பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை, மாணவர்கள் ‘ஆன்லைன்’ மூலமாக எழுதுவதற்குப் பல்கலைக்கழகம் திட்டமிட்டிருக்கிறது. அவ்வாறு  மாணவர்கள்  ‘ஆன்லைன்’ மூலம் இறுதித் தேர்வுகளை எழுதுவதற்கு முன்னோட்டமாக, மாதிரித் தேர்வுகளையும் கடந்த 19ம் தேதி நடத்தியிருக்கிறது. ஆனால், இதில் ஏராளமான தொழில்நுட்பக் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக  ‘ஆன்லைன்‘ வாயிலான இறுதித் தேர்வுகள் எப்படி நடைபெறப் போகிறதோ என்பது குறித்து மாணவர்களிடையே பெரும் அச்சமும், பதற்ற மனப்பான்மையும் தற்போது உருவாகியுள்ளது.

மாதிரித் தேர்வின் போது பல்கலைக்கழகத்தின் இணையவழி நிழற்படக்கருவி, தேர்வு எழுதிய பல மாணவர்களைப் பதிவு செய்யத் தவறி இருக்கின்றது. இன்னும் ஒரு படி மேலே போய், பல மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட  அந்த வலைப்பக்கத்தில் உட்புகவே இயலாமற் போயிருக்கின்றது. இதன் விளைவாகப் பல மாணவர்கள் தேர்வே எழுத முடியாத நிலையும், அப்படி எழுதிய பல மாணவர்களும்  கூடத் தேர்வு எழுதியதாகவே பதிவு செய்யப்படாத சூழ்நிலையும்  ஏற்பட்டிருக்கின்றது.  தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்பட்ட இத்தகைய குளறுபடிகளைக் களைந்து, மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் மாதிரித் தேர்வினைப் பிரச்னைகள் ஏதுமின்றி வெற்றிகரமாக நடத்திய பின்னரே, இறுதித் தேர்வுகளை நடத்திட  வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அவர்களுக்குப் பல முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆயினும், மாதிரித்  தேர்வை அன்றைய தினம் எழுதாத மாணவர்களுக்கு மட்டுமே மற்றொரு  மாதிரித் தேர்வு நடத்தப்படும் எனத் தேர்வுத்துறை தெரிவித்து இருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.  இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்கள் எந்த ஐயப்பாடும், குழப்பமுமின்றி தங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும் எனவும், தேர்வு எழுத முடியாத மாணவர்களின்  நலனைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,   முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: