மத்திய அரசு அறிவிப்பு கோதுமை கொள்முதல் விலை 50 உயர்ந்தது

புதுடெல்லி: வேளாண் மசோதாக்கள் விவகாரத்தால் நாடு முழுவதும் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில், அம்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் கோதுமை உள்ளிட்ட 6 ரபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நேற்று உயர்த்தியது. இது குறித்து மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘6 ரபி பருவ பயிர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் குளிர்கால பயிர்களை அறுவடை செய்ய உள்ள விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதன்படி, கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 50 உயர்த்தப்பட்டு, 1,975 ஆக கொள்முதல் செய்யப்படும். பருப்புகளுக்கான விலை 225 உயர்த்தப்பட்டு, குவிண்டால் 5,100 ஆக கொள்முதல் செய்யப்படும். பார்லி 75 அதிகரிக்கப்பட்டு குவிண்டால் 1,600க்கும், பயறு வகைகள் 300 உயர்த்தப்பட்டு குவிண்டால் 5,100க்கும் கொள்முதல் செய்யப்படும்’’ என்றார். இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சில காங்கிரஸ் எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

போட்டித் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்; திமுக எம்பி வலியுறுத்தல்

இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வாணையம் போன்றவை நடத்தும் போட்டித் தேர்வுகள் வரும் அக்டோபர் 4ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, இந்த போட்டித் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்  என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிஜேந்திர சிங்கிற்கு எழுதிய  கடிதத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி. பி. வில்சன் வலியுறுத்தி உள்ளார்.

அக்கடிதத்தில் அவர், ‘‘இத்தேர்வுகளை நடத்துவதால், மாணவர்கள், பெற்றோர் மற்றும் தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, அரசு பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது இந்த தேர்வுகளை நடத்தாமல் விடுவதால், வானம் இடிந்து கீழே விழ போவதில்லை. எனவே, இதை கருத்தில் கொண்டு போட்டி தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: