திருவேற்காட்டில் அதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவரை கொல்ல முயற்சி

பூந்தமல்லி: திருவேற்காட்டில் அதிமுக முன்னாள் நகர் மன்ற தலைவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவேற்காடு அடுத்த கோலடியை சேர்ந்தவர் மகேந்திரன் (52). அதிமுகவை சேர்ந்தவர். திருவேற்காடு முன்னாள் நகர்மன்ற தலைவர்.  நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் வசித்து வரும் அவரது மகளின் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் தனது வீட்டிற்கு பைக்கில் சென்று திரும்பினார். திருவேற்காடு அருகே சென்றபோது பின்னால் லோடு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் இவர் பைக்கின் பின்னால் வேகமாக இடித்தனர். இதில், மகேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, ஆட்டோவிலிருந்து  மர்ம நபர்கள் கையில் அரிவாளுடன் இறங்கினர்.

இதை கண்டதும் மகேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடினார். மர்ம நபர்கள் அவரை விடாமல் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டினர். இதில், மகேந்திரனின் தலையில் லேசான வெட்டு காயம் ஏற்பட்டது. சிறிது தூரம் ஓடிய அவர், பொதுமக்கள் அதிகம் கூடியிருந்த இடத்திற்கு சென்று தஞ்சமடைந்தார். இதை பார்த்தவுடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர்.   பின்னர் மகேந்திரனை அங்கிருந்த மக்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, புகாரின்பேரில் திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள் வௌியீடு

இந்த சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. வேட்டி சட்டையுடன் மகேந்திரன் ஓடி வருவதும், அவரது பின்னால் விடாமல் ஆயுதங்களுடன் வாலிபர்கள் விரட்டி வருவதும் அதில் பதிவாகியுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் மகேந்திரன் நுழைந்ததால் அவரை தீர்த்து கட்ட முடியாமல் துரத்தி வந்தவர்கள் திரும்பி ஓடும் காட்சிகளும் அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

Related Stories: