ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ .15 லட்சம் வைக்கும் வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றியதா? : ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!!

டெல்லி:  அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதியை நம்புவதற்கு விவசாயிகள் மிகவும் முட்டாள்கள் என்று அமைச்சரும் அரசாங்கமும் நினைக்கிறார்களா? என்று ப.சிதம்பரம் காட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு இடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த வேளாண் மசோதாக்கள், மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இம்மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகளும், நாடு முழுவதும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம்,  தனது டிவிட்டர் பக்கத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

அதில், விவசாயிக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்பதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும் என்று விவசாய அமைச்சர் கூறுகிறார். தனியார் வர்த்தகம் இன்றும் நடைபெறுகிறது. விவசாயிக்கு செலுத்தப்படும் விலை, குறைந்த பட்ச ஆதரவு விட குறைவாகவே உள்ளது. குறைந்த பட்ச ஆதரவு (எம்.எஸ்.பி) விலையை வேளாண் அமைச்சரால் உறுதிப்படுத்த முடிந்தால், அவர் ஏன் இதுவரை அவ்வாறு செய்யவில்லை? எந்த விவசாயி தனது விளைபொருட்களை எந்த வர்த்தகருக்கு விற்றார் என்பதை அமைச்சருக்கு எப்படித் தெரியும்? நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் நடக்கும் மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளை அவர் எவ்வாறு அறிந்து கொள்வார்?

அவரிடம் தரவு இல்லையென்றால், ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை செலுத்தப்படுவதை அவர் எவ்வாறு உத்தரவாதம் செய்வார்? அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதியை நம்புவதற்கு விவசாயிகள் மிகவும் முட்டாள்கள் என்று அமைச்சரும் அரசாங்கமும் நினைக்கிறார்களா? ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ .15 லட்சம் வைக்கும் வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றியதா? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றியதா? ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உறுதிமொழியை மோடி அரசு நிறைவேற்றியதா? என்று சரமாரியாக ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மோடி அரசு விவசாயிகளிடம் பொய் சொல்வதையும், தவறான வாக்குறுதிகளை வழங்குவதையும் நிறுத்திக் கொள்ள  வேண்டும் என்றும் தனியார் பரிவர்த்தனைகளில் எம்.எஸ்.பி.க்கு உத்தரவாதம் அளிக்கும் மத்திய அரசின் வாக்குறுதி, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ .15 லட்சம் டெபாசிட் செய்வதற்கான வாக்குறுதியைப் போன்றது என்றும் ப.சிதம்பரம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: