வேளாண் மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் 25ம் தேதி சாலை மறியல்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை: வேளாண் மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 25ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளது. விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டமசோதா என மூன்று மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், அரியானா மாநிலத்தில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மத்திய அரசின் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜ அரசு வேளாண்துறை சார்ந்த மூன்று சட்டங்களையும் நிறைவேற்றிவிட்டது. இந்த நாள் இந்திய விவசாயிகளை பொறுத்தவரை “கருப்பு ஞாயிறு” ஆக அமைந்துவிட்டது. இந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் இந்திய விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எவ்வித பாதுகாப்பும் இருக்காது. முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களையும், உள்நாட்டு பெருநிறுவனங்களையும் சார்ந்து வாழ வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மிக மிக மோசமான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் சட்டத்திற்கு வக்காலத்து வாங்கி தமிழக முதல்வர் பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்த சட்டங்களை பாராளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்ததன் மூலம் அதிமுக தமிழக விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு செப்டம்பர் 25ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சாலைமறியல் மற்றும் சட்ட நகலெரிப்பு போராட்டம் நடத்தப்படும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் சாலைமறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தவும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை பங்கேற்கச் செய்யவும் முழுவீச்சில் செயல்படுவதென்று மாநில நிர்வாகிகள் கூட்டம் முடிவு செய்துள்ளது.எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பாடம் புகட்டும் வகையிலும், மத்திய பாஜ அரசுக்கு தமிழகத்தின் ஒருமித்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் செப்டம்பர் 25ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று வெற்றியடைய செய்ய வேண்டும். இவ்வாறு பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: