போக்குவரத்து போலீசாரை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை முயற்சி

துரைப்பாக்கம்: நீலாங்கரை வைத்தியலிங்கம் சாலையை சேர்ந்தவர் முத்துக்குமார் (50), லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி மாற்றுத்திறனாளி. தம்பதிக்கு  3 மகள்கள் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட முத்துக்குமார், கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். மீண்டும் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறியதாக இவருக்கு அபராதம் விதித்ததாக  கூறப்படுகிறது. மேலும், இவரிடமிருந்து அபராத தொகையை வசூலிக்க வங்கி ஏடிஎம் கார்டை போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஏடிஎம் கார்டு வீட்டில் உள்ளது.

திரும்பி வரும்போது, அதனை கொண்டு வருவதாக போலீசாரிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.  பின்னர், ஆட்டோ ஓட்டிசென்றால், போலீசார் மீண்டும் தன்னை பிடித்து அபராதம் செலுத்த சொல்வார்கள் என பயந்த முத்துக்குமார்,  கடந்த 3 நாட்களாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். ஆனால், குடும்பம் நடத்த வருவாய் இல்லாததால் மனமுடைந்த அவர், போக்குவரத்து போலீசாரை கண்டித்து நேற்று மாலை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலை அரசு ஆதி திராவிடர் உயர்நிலைப்பள்ளி எதிரே உள்ள 40 அடி உயர செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்க வைத்தனர்.

Related Stories:

>