கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை 5 கிமீ தூர கால்வாயை சுத்தம் செய்த கிராமமக்கள்

*காரைக்குடி அருகே அதிரடி

காரைக்குடி : காரைக்குடி அருகே கண்மாய்க்கு தண்ணீர் வரும் வகையில் 5 கிமீ தூர வாய்க்காலை கிராமமக்களே சுத்தம் செய்தனர். காரைக்குடி அருகே உள்ளது வேலங்குடி கண்மாய். இதன் மூலம் 6 ஆயிரம் எக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகின்றன. நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் கண்மாய்க்கு பல ஆண்டுகளாக மழைநீர் வந்து சேரவில்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அனுமதிக்க வேண்டும் என வேலங்குடி கிராமமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கலெக்டர் ஜெயகாந்தன் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற அனுமதி அளித்தார்.

இதை தொடர்ந்து கோ.வேலங்குடி கிராமமக்கள் தங்கள் சொந்த செலவில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 70 அடி அகலமுள்ள பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றி கடந்த ஒரு மாதமாக சுத்தம் செய்தனர். இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைப்பாளர் பாண்டித்துரை கூறுகையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கண்மாய்க்கு சரிவர மழைநீர் வந்து சேரவில்லை. எனவே கிராமத்தில் கூட்டம் நடத்தி ஆக்கிரமிப்பை அகற்ற முடிவெடுத்தோம். தற்போது 5 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாயை சுத்தம் செய்துள்ளோம். இனி வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் நிச்சயம் எங்கள் ஊர் கண்மாய் நிரம்பி விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று மீண்டும் விவசாயம் உயிர்பெறும் என்றார்.

Related Stories: